Saturday, October 15, 2011

ஆனைக்கா...


(1.1.2000 அன்று கோவை வடவள்ளி ஸ்வாமிஜி செளரிராஜன் அவர்கள் பிறந்த நாள்.அது நடந்த திருமண மண்டபத்தில்(பழைய பக்‌ஷிராஜா ஸ்டுடியோ) புனையப் பட்ட பாடல் இது. அவர்கள் அகிலாண்டேஸ்வரி தேவி உபாசகர். எங்களுக்கெல்லாம் லலிதா திரிசதி சொல்லிக் கொடுத்தவர்)

ராகம் : அடாணா
தாளம் : ஆதி

பல்லவி
ஆனைக்காவிலுறை அகிலாண்டேஸ்வரியை
அனுதினமும் பாட அனுக்ரகம் தர வேண்டும்....
(ஆனை..
அனுபல்லவி
பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக,
பாடும் பாக்களுக்கு இதுவே முதலாக.....
(ஆனை..
சரணம்
தேனை சுவைக்கும் இன்பத்தினை, பார்க்கும்
பார்வையில் அருளும் பராசக்தி தாயே-தரன்,
ஊணிலும்,உயிரிலும் உணர்வென நீ கலந்து,
உத்தமனாய் வாழ்ந்து உயர்ந்திட வரம் வேண்டும்.
(ஆனை..

Tuesday, August 16, 2011

கழுகிற்கு இரையாமோ இப்பிறவி?


ராகம் : ரஞ்சனி தாளம் : ஆதி
பல்லவி

மெழுகிட வேண்டும் மனதினை - அது
ஆண்டவன் உறையும் இடமல்லவா.......
--- மெழுகிட...
அனுபல்லவி
அழுக்கினைக் களைந்து அகந்தையை ஒழித்து,
உருக்கிடும் நெய் போல் மணந்திட வேண்டும்....
--- மெழுகிட....
சரணம்
நழுவிடும் வாழ்வை உணராப் பேதையாய்,
பழகிடும் அன்பினை பணத்தால் வெறுத்து,
அழுகிடும் உடலை ஆசையுடன் பேணி,
கழுகிடம் உணவாய் கொடுப்பது தகுமோ.
--- மெழுகிட....

Monday, June 13, 2011

குரு நாதர் துணை!!!


பாடல் புனைந்த இடம் : கர்ப்பகிருஹம் குருநாதர் ஸ்வயம்ப்ரஹாஸ ஸ்வாமிகள் ஸன்னிதி
பாடல் புனைந்த நேரம் : காலை பத்து மணி முதல் பத்தரை வரை..
பாடல் புனைந்த நாள் : 17.12.1998 வியாழக் கிழமை.

[ஐம்பதாவது குரு நாதர் ஆராதனை. அறுபது வருடங்களுக்கு ஒரு முறை தான் வியாழனன்று (குரு வாரம்) ஆராதனை வரும்..17.12.1998 வியாழன்று ஆராதனை வெகு விமர்சையாக நடந்தது.என் மாமனார் ஆதிகுடி கிளப் ராமகிருஷ்ண ஐயர்..அவருக்குப் பின் என் மைத்துனர் ஸத்ய வாகீஸ்வரன் & பிரதர்ஸ் அந்த அவதூதருடைய பக்தர்கள்..மைத்துனர் ஸத்யவாகீஸ்வரனுடன் அந்த வியாழனன்று நடந்த ஆராதனைக்கு சென்றிருந்தேன்.அப்போது ஏதோ தோன்ற,இதை எழுதி, அன்னணம் புனையப் பட்ட பாடல் குரு சன்னிதானத்தில் தத்தாத்ரேயர் சன்னிதியில் வைக்கப் பட்டது..ஆராதனை நடந்த இடம், நாமக்கல் சேந்த மங்கலம்..இந்த அவதூதர் புதுக் கோட்டை ஜட்ஜ் ஸ்வாமிகளின் குரு என்று கேள்வி! பாடலைப் பார்ப்போமா?]
ராகம் : ரேவதி தாளம் : ஆதி


பல்லவி
அபயம் அளிப்பாய் நிர்குண வாஸா..
சுந்தர ரூபா..ஸ்வயம்ப்ரஹாஸா...
.......(அபயம்)
அனுபல்லவி
சமய சஞ்சீவி சத்குரு நாதா....
உமையொரு பாகனின் ப்ரிய அவதூதா
.......(அபயம்)
சரணம்
அவயம் அடங்கி அருள்தனை பெறவே..
உபாயம் ஒன்றை உணர்த்திடு குருவே...
.......(அபயம்)

Wednesday, April 20, 2011

மனோன்மணியம் துதி

இந்த பாடல் புனையப் பட்ட நாள் 13.11.1998 நேரம் காலை 10.20 மணி. நண்பர் ஒருவர் நான் ஏதோ இந்த மாதிரி எழுதுவதைப் பார்த்து சொன்னார்: " அப்பா, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவிலில் மனோன்மணியம் என்று ஒரு தெய்வம் இருக்கிறது. அவளிடம் நீ மனமுருகி வேண்டினால், கருத்தாழம் மிக்க பாடல்களை நீ புனைய அருள் புரிவாள்" என்று கூற, அடுத்த நாளே எழுதிய பாடல் இது! இதன் பிறகு மதுரை கோவிலுக்கு பல தடவை சென்றுள்ளேன். இருந்தும் அந்த அம்மன் இருக்கும் இடம், நான் கேட்ட யாருக்கும் தெரியவில்லை.. ஆகவே, மதுரை அன்பர்கள் இந்த விஷயத்தில் உதவி, இந்த அந்தகனின் அகக் கண்ணினை திறந்தால், மிக்க நன்றி உடையவனாய் இருப்பேன்...)

ராகம் : சுபபந்துவராளி தாளம் : ஆதி

பல்லவி

மதுரையில் உறைந்திடும் மனோன்மணியமே
மனதினில் இறைமையை ஊட்டிடுவாய்-தேவி

அனுபல்லவி

வாக்கிலே வளமையும்,புலமையும்வர வேண்டும்
நோக்கிலே எண்ணங்கள் உயர்ந்திடல்வேண்டும்

சரணம்

பாக்களில் நின்னை அர்ச்சிக்கும் வரம் வேண்டும்
என் நாவினில்நின் பதம்நர்த்தனமிடல்வேண்டும்
ஏக்கம் என்னுள் மறைந்திட வேண்டும்,
நீக்கமற நீ நின்றிடல் வேண்டும்.......

--- சுபம் -----

Friday, April 1, 2011

விருத்தம்...ராகம் : சாமா...


(இந்த பாடல் புனைந்து சரியாக பன்னிரெண்டு வருடம் கழித்துத் தான், பழமுதிர்சோலை யை அடியேன் காண நேர்ந்தது.அப்போது லேசாய மழைத் தூறிட என்னுள் பீறிட்டது, ஆனந்தம்
இப்போது அப்பாடலை பார்க்கையில் அதனினும் ஆனந்தம்..அந்த ஆனந்தம் நம் அன்பர்கள் பகிர்விற்கு!)


விருத்தம்


செவ்விள நீர் குலை காய்த்துக் குலுங்கிட,
மேவிய பூங்காற்று மேனி தழுவிட...
கவ்விய கனிகளை மந்திகள் சிந்திட,
செய்யுடன் திருமால் இருந்திடும் சோலையே...
செய்யுடன் திருமால் இருந்திடும் சோலையே....

Monday, February 28, 2011

சரஸ்வதி துதி!

(ஏதோ ஒரு சரஸ்வதி பூஜை அன்று ஒரு பன்னிரெண்டு வருடங்கள் முன்பு எழுதியது)

ராகம் : தேஷ் தாளம் : ஆதி
பல்லவி

அகலிடைச் சுடர் போல அறிவினைத் தூண்டும்,
சகல கலா வல்லி சரஸ்வதி ........
( அகலிடை..
அனுபல்லவி
புகலிடம் தெரியாமல் தவிக்கின்ற மாந்தருக்கு,
தகுமிடம் தந்து ஆதரிக்கும் தாய் நீயே.....
( அகலிடை..

அகத்தினில் இருக்கும் அழுக்கினைக் களைந்து,
ஜகத்து மனிதர்களின் பிணியினை நீக்கி,
முகத்தில் கண் போல ஒளிர்ந்திடும் அறிவினை,
ககன மழை போல் பொழிந்திடும் வாணி......
( அகலிடை...

Tuesday, February 1, 2011

காலகண்டர் துதி!!


( திருச்சி கருமண்டபம் அருகில் காலகண்டேஸ்வரர் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த கோவில் பராமரிப்பு..பூஜை ..எல்லாவற்றையும் ரயில்வேயில் பணி ஓய்வு பெற்ற அன்பர் ஒருவர் (HE IS A COST ACCOUNTANT) வெகு ஸ்ரத்தையாய் செய்வார்.அந்த வயதிலும் அவர் இறையனாருக்கு பலம்,
தலம்,புஷ்பம் போல நாதானுபாசனையும் செய்ய வேண்டும் என்கிற அவாவில் ஃப்ளூட் கற்றுக் கொண்டார் என்பது கூடுதல் செய்தி)

ராகம் : ரீத கெளளை தாளம் : ஆதி

பல்லவி

பாரா முகம் ஏனய்யா.....பகதனிடம்
.....பாரா
அனுபல்லவி

தீராத வினை யாவும் தீர்ப்பவனே தீந்தமிழால்,
நின்னை நான் பாட வந்தேன்......
......பாரா

சரணம்

உருகாமல் பஜிப்பவருக்கு கருங்கல்லாக நிற்பவனே,
கசிந்துன்னை வேண்டுகிறோம், காலகண்டா காத்தருள்வாய்...

......பாரா

Tuesday, January 4, 2011

மாத்ருபூதேஸ்வரர் துதி!


ராகம் : கானமூர்த்தே தாளம் : ஆதி

பல்லவி

தாயாய் எழுந்த தயாபரனே...
(தாயாய்...

அனுபல்லவி

மாயாப் பிறவி பிணிக்கு - அரு
மருந்தாய் அமைந்த மஹா தேவா
(தாயாய்....

சரணம்


ஜகத்தில் பிறவி போதும் என
மகப்பேறு பார்த்த மாயக் கூத்தனை
கேட்பது முறையாகுமோ...அம்மா,அது
நகைப்பிற்கு இடம் ஆகுமோ?
(தாயாய்...