.எழுதும் ..பாக்களில் ஆழ்ந்த உள் கருத்து இயல்பாய் பொருந்த வேண்டும் என்பதே அவா... அது இறை அருளால் மட்டுமே ஸாத்யம். அதுவும் இறையருள் பெற்ற வாக்கேயக் காரர்களுக்கு மட்டுமே ஸாத்யம்.மற்றபடி, இந்த மண்ணில் உதித்த மஹா மனிதர்கள் தம் ஆழ்மனத்துள் அமிழ்ந்து கிடந்த அதி அற்புதமான உணர்வினை, பாக்களாக வடித்து பாமரனுக்கும் பகிர்ந்தளித்த பாங்கினை இந்த சிறியேன் களங்கப் படுத்தாதிருப்பின் அதுவே பெரும் பாக்கியம்.... இப்படிக்கு, ”தரன்”
Thursday, December 23, 2010
சுபபந்துவராளியில் ஒரு கீர்த்தனை!
ராகம்: சுபபந்துவராளி தாளம்: ஆதி
பல்லவி
ஏன் இந்த மெளனம் ஸ்வாமி - ஏழை
எந்தனுக்கு அனுக்ரஹம் புரிய இன்னும்
--ஏன்
அனுபல்லவி
பாவி நான் பட்ட துன்பம் போதுமிந்த நானிலத்தில்
ஆவி அடங்குமின்னே ஆட்கொள்ள வேண்டுமையா..
-- ஏன்
சரணம்
ஏய்த்துப் பிழைக்குமிந்த மானிடரின் மத்தியிலே,
அன்புடன் அரவணைத்து ஆதரிக்க ஆருமில்லை..
அர்த்தமில்லா வாழ்க்கை வாழ்ந்தினிப் பயனில்லை,
ஆண்டவனே உனையன்றி உற்ற துணை யாருமில்லை
-- ஏன்
Saturday, December 11, 2010
விஷ்ணு துதி!
(இன்று ஸ்ரீரங்கத்தில் ஐந்தாம் நாள் பகல் பத்தாக்கும். அரங்கனை காணத்தான்
வாருங்களேன்)
ராகம் : சாரங்கா தாளம் : ஆதி
பல்லவி
அரங்கனைக் காண வாருங்கள்...
அற்புத தரிசனம் பாருங்கள்....
..அர
அனுபல்லவி
அள்ளிக் கொள்ளும் அழகில்,
அகண்ட காவிரியில்....
பள்ளி கொண்டான்
பெருமாள்....பாருங்கள்..
..அர
சரணம்
அலைகடல் ஓரம் அணங்கினை மீட்க,
அயர்ந்தது தர்ப்ப சயனத்திலோ?
தளை தனில் இருந்து பக்தனைக் காக்க,
சாய்ந்தது சர்ப்ப சயனத்திலோ? ..அர
Friday, November 26, 2010
ஆனந்த தாண்டவம் !
( இது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திர கோச மங்கை என்கிற பாடல் பெற்ற தலத்தில் உள்ள ஸ்வாமியைப் பற்றியது. நேரம் கிடைத்தால் போய்ப் பாருங்கள்.எனக்கு அற்புத தரிசனம் கிடைத்தது. ஆதிரை அன்று விசேஷம்)
தஞ்சை பெரிய கோவில் III கங்கை கொண்ட சோழேஸ்வரம் . அது போல, ராமேஸ்வரம் கோவில் III உத்தர கோச மங்கை திருக் கோவில்.
-- -000000000000000---
ராகம்: கரகரப்ரியா தாளம் : ஆதி
விருத்தம்
உத்தர கோச மங்கை உறையுள்
ரெத்தின சபையின் தெரிசனமின்றி,
வித்தகன் ஆடிய விந்தை அறியா,
அந்தகன் போல் நான் வாழ்ந்திருந்தேன்.
----
பல்லவி
ஆட்டத்தை யாரறிவார்? ஐயனின்
ஆட்டத்தை யாரறிவார்....
--ஆட்
அனுபல்லவி
மங்கள நாதனின் அற்புத அழகில்
திங்களை சூடிய ஆடிய பாதத்தின்..
-- ஆட்
சரணம்
சித்தரும் போற்றும் சிவ திருப்பதியாம்
உத்தர கோச மங்கையூரில்,
நர்த்தனமாடும் கணபதி சூழ,
அர்த்தமுடன் ஐயன் ஆடுகின்றான்
-- ஆட்
------
Thursday, November 11, 2010
(இன்று 11.11.2010 சஷ்டி. சூர சம்ஹாரம்...இது
அந்த சிங்கார வேலனுக்காக.....)
ராகம்: ஷண்முகப்ரியா தாளம்: ஆதி
பல்லவி
நித்திரையில் வந்தென் நெற்றிதனில் முத்தமிட்ட
பித்தனவன் பெயர் யாதோ? ----- தோழி
அனுபல்லவி
சேவல் கொடியோனோ..செந்தமிழ் பாலகனோ..
செந்தூர் முருகனோ..சிவ ஷண்முகனோ...
------ நித்
சரணம்
மனத்துள் புகுந்து கொண்ட
மகத்தான மாயவனை...
நினைத்த மாத்திரத்தில்,
நெஞ்சம் கலீரென்று,
சிரித்தென்னை ஆட்கொண்ட,
சிங்கார வேலவனை...
பறித்துக் கொண்டது போல்,
பதைத்து நான் நிற்கின்றேன்.
---- நித்
Tuesday, November 2, 2010
காளிங்கன் கர்வ பங்கம்....
இறை வணக்கம் --
விடையினிலமர்ந்த வண்ணம்
வில்வத்தில் மகிழுமண்ணல்-புலி
உடையினைச் சூடும் புனிதன்,
பிள்ளையாம் ஞான முதல்வன்
கடையவன் 'தரனெ'ழுதும்
காளிங்கன் கர்வ பங்கம்
தடையெல்லாம் நீங்கி-புவி
போற்றவே அருள் புரிவாயே
-------
அந்தி சாயும் வரை
ஆய்குலச் சிறாருடன் இரவி
வந்து இறங்கினார் போல்,
புவி ஒளிர, மிளிர வந்தான்
கந்த மணம் கமழும்
யமுனை நதிக் கரையில்,
எந்தன் உள்ளம் கவர் கண்ணன்
நின்று ஆடலுற்றான்.
ஆடலும், பாடலுமாய் சிறார்,
ஆட்டத்தை ஆட விட்டு,
வேடம் தரித்த மாயன்
பூப்பந்தை தவற விட்டான்.
ஓடிப் பிடித்து ஆடி- சற்றே,
ஓய்ந்து நின்ற பாலர்
தேடி எண்டிசைப் போந்தார்..
'எங்குமே இல்லை' என்றார்.
இல்லை, இல்லை இல்லை என்று,
எங்கும் பதில் வரவே,
எல்லையில்லா அன்பில், உலகைக்
காத்து நிற்கும் கடவுள்,
தொல்லை வருமென அறிந்தே,
தொலைந்து போன பந்தை- நண்பர்
சொல்லை மீறி சென்றான்,
என்றும் ஈகை குண மிக்கான்.
ஈகை குண மிக்கான் உடன்
யமுனை நதி போந்தான்,
'சாகக் கொடுத்திடவா, தாயார்
இவனை ஈன்றெடுத்தாள்' என
ஏகக் குரலில் சிறுவர்
புலம்பியழுத பின்னர்
தேகம் நடுங்க சொன்னார்-'கரு
நாகம் போக்குமுயிரை..'
உயிரை மதியாமல் யமுனை
ஆற்றில் இறங்கி விட்டான்,
அயிரை வழி காட்ட
ஆபத்தைத் தேடிச் சென்றான்-நற்
பயிரை அழிக்க வல்ல கொடும்
விடத்தைக் கக்கும் நாகன்
'தயிரை கடையும் சிறுவா, நானுன்னை
தகிப்பேன்' என ஊத...
ஊதிய விடச் சுவாலை அவனை
ஒன்றும் செய்யாது - இது
ஆதி சேடன் தாங்கும்
அற்புத சீவன் என
மோதி உணரா நாகன்,
சீறிப் பாய்ந்திடவே, பாம்பு
சாதி சனங்களெல்லாம்,
பதற்றத்தில் எழும்பி நிற்க....
எழும்பி நின்ற நாகர்
வியந்து நடுங்கிடவே, விடத்
தழும்பு துளியுமின்றி கண்ணன்
தனித்து அமர் புரிந்தான்.
கழுபேருவகைக் கொண்டு-கொடுங்
காளிங்கன் வால் பற்றி
எழுந்து தலை மேல் நிற்க,
நாகனும் ஏற்றம் பெற்றான்.
ஏற்றம் பெற்ற நாகன் ஒன்று
புரிந்து கொண்டான் - பிள்ளை
தோற்றம் சிறிதெனினும் 'பெரும்
ஆளெ' ன்று உணர்ந்து கொண்டான்
ஆற்றல் பெற்ற இவன் நம்மைக்
காக்கும் கடவுளென்று, மனம்
தேற்றிக் கொண்ட நாகன்,
அழைத்தானவனை 'ஐயே' என்று...
ஐயே என்றினிய சொல் அவன்
ஆட்டத்தை நிறுத்தி விட,
பையக் காலசைக்க உடன்
காளிங்கன் விடுபட்டான்
'தையல் நாயகா நானேது
பிழை செய்தேன்' என அடங்கி
கை குவித்து நாகன்
உடல் ஒடுங்கலானான்.
ஒடுங்கி நின்றவனை கண்ணன்
ஒன்று கேட்டுக் கொண்டான்
'இடராகப் போகும் நாகா,
நீ இங்கு உறைந்திருந்தால்...
விடத்தினைக் கக்குவது உந்தன்
இயல்பாகுமதனால், இவ்-
விடத்தினை விட்டகன்று,
ஆழ்கடல் ஓடிடுவாய்'
'ஓடிடுவேன் கண்ணா ஓடிடுவேன்
யமுனை விட்டகன்று ஓடிடுவேன்
பாடிடுவேன் கண்ணா பாடிடுவேன்
பாரினில் உன் புகழ் பாடிடுவேன்..
நாடிடும் பேருக்கு நற்கதியளித்திட,
நாராயணா என ஓதிடுவேன்-பகை
தேடிடும் கருடனை மாற்றிடுமுந்தன்,
பாதமெனக்கினி ஒளடதமே!'
'ஒளடதம் தந்தேன் நாகா, உந்தன்
பத்தினிப் பெண்டிருடன் வெகு
செளக்யமாயிரு' என
ஆசிர்வதித்தான் கண்ணன்
ஆனந்தம் மீக்கூற நாகன்
சிரசினில் பாதம் வைத்து,
அற்புதமாய் கண்ணன் காளிங்க
நர்த்தனமாடுகின்றான்.
வேறு
--------
ஆடுகின்றான் கண்ணன் ஆடுகின்றான்
ஆனந்தத்திலவன் ஆடுகின்றான்
நாரதனருகினில் பாடுகின்றான்..
நான்முகனுமங்கே ஆடுகின்றான்...
துந்துபி மேளங்கள் முழங்கிடவே,
தேவர்கள் பூமாரி பொழிந்திடவே,
மரகத வீணை முழங்கிடவே...
நந்தியுடன் ஐயனும் ஆடுகின்றான்....
--- மங்களம் -----
Wednesday, October 27, 2010
அம்மன் துதி
ராகம் : சஹானா தாளம் : ஆதி
பல்லவி
தாயே நினை நான் சரணடைந்தேன் - தெய்வ
நாயகியே, அம்மையே, உமையே எந்தன் தாயே,
அனுபல்லவி
நாயேன் நற்றமிழினில் நல்ல துதி செய்வதெல்லாம்.....
நோயில் கிடவாமல் ஓர் நொடிக்குள் முடிய வேண்டும் - (தாயே)
சரணம்
ஓயா ஒழிவில்லா அவலத்தில் ஆழ்த்தியென்னை,
பேயாய் அலைக்கழித்த பெருந்துன்பம் போதுமம்மா...
மாயாப் பிறவியின் மயக்கத்தை களைந்தெடுக்க..
சேயாய் கதறுகின்றேன்,செவி மடுத்துக் கேளுமம்மா....
---- (தாயே)
பல்லவி
தாயே நினை நான் சரணடைந்தேன் - தெய்வ
நாயகியே, அம்மையே, உமையே எந்தன் தாயே,
அனுபல்லவி
நாயேன் நற்றமிழினில் நல்ல துதி செய்வதெல்லாம்.....
நோயில் கிடவாமல் ஓர் நொடிக்குள் முடிய வேண்டும் - (தாயே)
சரணம்
ஓயா ஒழிவில்லா அவலத்தில் ஆழ்த்தியென்னை,
பேயாய் அலைக்கழித்த பெருந்துன்பம் போதுமம்மா...
மாயாப் பிறவியின் மயக்கத்தை களைந்தெடுக்க..
சேயாய் கதறுகின்றேன்,செவி மடுத்துக் கேளுமம்மா....
---- (தாயே)
Monday, October 25, 2010
முதல் வணக்கம்
வினாயகர் துதி
ராகம் : நாட்டை தாளம் : ஆதி
பல்லவி
அனாதி நாள் முதல் அனைவரும் போற்றும்
கணாதிபதயே கஜமுகனே....
( அனாதி)
அனுபல்லவி
குணா நிதியே குவலயம் காப்பாய்....
தனாதிபதயே தயை புரிவாய்....
(அனாதி)
சரணம்
அனாத ரட்சகா .... ஆபத் பாந்தவா...
வினாச கால வினை தீர்ப்பாய், அங்கெங்
கெணாத படி எங்கும் இருக்கும்...
வினாயகனடி பணிந்திடுவோம்.
(அனாதி)
ராகம் : நாட்டை தாளம் : ஆதி
பல்லவி
அனாதி நாள் முதல் அனைவரும் போற்றும்
கணாதிபதயே கஜமுகனே....
( அனாதி)
அனுபல்லவி
குணா நிதியே குவலயம் காப்பாய்....
தனாதிபதயே தயை புரிவாய்....
(அனாதி)
சரணம்
அனாத ரட்சகா .... ஆபத் பாந்தவா...
வினாச கால வினை தீர்ப்பாய், அங்கெங்
கெணாத படி எங்கும் இருக்கும்...
வினாயகனடி பணிந்திடுவோம்.
(அனாதி)
Subscribe to:
Posts (Atom)