Tuesday, November 2, 2010

காளிங்கன் கர்வ பங்கம்....


இறை வணக்கம் --

விடையினிலமர்ந்த வண்ணம்
வில்வத்தில் மகிழுமண்ணல்-புலி
உடையினைச் சூடும் புனிதன்,
பிள்ளையாம் ஞான முதல்வன்
கடையவன் 'தரனெ'ழுதும்
காளிங்கன் கர்வ பங்கம்
தடையெல்லாம் நீங்கி-புவி
போற்றவே அருள் புரிவாயே
-------

அந்தி சாயும் வரை
ஆய்குலச் சிறாருடன் இரவி
வந்து இறங்கினார் போல்,
புவி ஒளிர, மிளிர வந்தான்
கந்த மணம் கமழும்
யமுனை நதிக் கரையில்,
எந்தன் உள்ளம் கவர் கண்ணன்
நின்று ஆடலுற்றான்.

ஆடலும், பாடலுமாய் சிறார்,
ஆட்டத்தை ஆட விட்டு,
வேடம் தரித்த மாயன்
பூப்பந்தை தவற விட்டான்.
ஓடிப் பிடித்து ஆடி- சற்றே,
ஓய்ந்து நின்ற பாலர்
தேடி எண்டிசைப் போந்தார்..
'எங்குமே இல்லை' என்றார்.

இல்லை, இல்லை இல்லை என்று,
எங்கும் பதில் வரவே,
எல்லையில்லா அன்பில், உலகைக்
காத்து நிற்கும் கடவுள்,
தொல்லை வருமென அறிந்தே,
தொலைந்து போன பந்தை- நண்பர்
சொல்லை மீறி சென்றான்,
என்றும் ஈகை குண மிக்கான்.

ஈகை குண மிக்கான் உடன்
யமுனை நதி போந்தான்,
'சாகக் கொடுத்திடவா, தாயார்
இவனை ஈன்றெடுத்தாள்' என
ஏகக் குரலில் சிறுவர்
புலம்பியழுத பின்னர்
தேகம் நடுங்க சொன்னார்-'கரு
நாகம் போக்குமுயிரை..'

உயிரை மதியாமல் யமுனை
ஆற்றில் இறங்கி விட்டான்,
அயிரை வழி காட்ட
ஆபத்தைத் தேடிச் சென்றான்-நற்
பயிரை அழிக்க வல்ல கொடும்
விடத்தைக் கக்கும் நாகன்
'தயிரை கடையும் சிறுவா, நானுன்னை
தகிப்பேன்' என ஊத...

ஊதிய விடச் சுவாலை அவனை
ஒன்றும் செய்யாது - இது
ஆதி சேடன் தாங்கும்
அற்புத சீவன் என
மோதி உணரா நாகன்,
சீறிப் பாய்ந்திடவே, பாம்பு
சாதி சனங்களெல்லாம்,
பதற்றத்தில் எழும்பி நிற்க....

எழும்பி நின்ற நாகர்
வியந்து நடுங்கிடவே, விடத்
தழும்பு துளியுமின்றி கண்ணன்
தனித்து அமர் புரிந்தான்.
கழுபேருவகைக் கொண்டு-கொடுங்
காளிங்கன் வால் பற்றி
எழுந்து தலை மேல் நிற்க,
நாகனும் ஏற்றம் பெற்றான்.

ஏற்றம் பெற்ற நாகன் ஒன்று
புரிந்து கொண்டான் - பிள்ளை
தோற்றம் சிறிதெனினும் 'பெரும்
ஆளெ' ன்று உணர்ந்து கொண்டான்
ஆற்றல் பெற்ற இவன் நம்மைக்
காக்கும் கடவுளென்று, மனம்
தேற்றிக் கொண்ட நாகன்,
அழைத்தானவனை 'ஐயே' என்று...

ஐயே என்றினிய சொல் அவன்
ஆட்டத்தை நிறுத்தி விட,
பையக் காலசைக்க உடன்
காளிங்கன் விடுபட்டான்
'தையல் நாயகா நானேது
பிழை செய்தேன்' என அடங்கி
கை குவித்து நாகன்
உடல் ஒடுங்கலானான்.

ஒடுங்கி நின்றவனை கண்ணன்
ஒன்று கேட்டுக் கொண்டான்
'இடராகப் போகும் நாகா,
நீ இங்கு உறைந்திருந்தால்...
விடத்தினைக் கக்குவது உந்தன்
இயல்பாகுமதனால், இவ்-
விடத்தினை விட்டகன்று,
ஆழ்கடல் ஓடிடுவாய்'

'ஓடிடுவேன் கண்ணா ஓடிடுவேன்
யமுனை விட்டகன்று ஓடிடுவேன்
பாடிடுவேன் கண்ணா பாடிடுவேன்
பாரினில் உன் புகழ் பாடிடுவேன்..
நாடிடும் பேருக்கு நற்கதியளித்திட,
நாராயணா என ஓதிடுவேன்-பகை
தேடிடும் கருடனை மாற்றிடுமுந்தன்,
பாதமெனக்கினி ஒளடதமே!'

'ஒளடதம் தந்தேன் நாகா, உந்தன்
பத்தினிப் பெண்டிருடன் வெகு
செளக்யமாயிரு' என
ஆசிர்வதித்தான் கண்ணன்
ஆனந்தம் மீக்கூற நாகன்
சிரசினில் பாதம் வைத்து,
அற்புதமாய் கண்ணன் காளிங்க
நர்த்தனமாடுகின்றான்.

வேறு
--------

ஆடுகின்றான் கண்ணன் ஆடுகின்றான்
ஆனந்தத்திலவன் ஆடுகின்றான்
நாரதனருகினில் பாடுகின்றான்..
நான்முகனுமங்கே ஆடுகின்றான்...
துந்துபி மேளங்கள் முழங்கிடவே,
தேவர்கள் பூமாரி பொழிந்திடவே,
மரகத வீணை முழங்கிடவே...
நந்தியுடன் ஐயனும் ஆடுகின்றான்....

--- மங்களம் -----

31 comments:

  1. அருமை சார். அப்புறம் அந்த அந்தாதி மிக அருமை.

    காளிங்க நர்த்தனம் எழுத சரஸ்வதியே உங்கள் விரலில் வந்து விட்டாளோ என்றுதான் படுகிறது.

    அப்புறம் அந்த மங்களம் ஊத்துக்காடு வெங்கட கவியை நினைவுபடுத்துகிறது.

    இதே போல் இன்னும் நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete
  2. ஆஹா.. கழிபேருவகை கொள்கிறது மனம்.. ஆனந்தக் கூத்தில்.. அருமை.. அருமை..

    ReplyDelete
  3. ஆகா, அருமை, குடும்ப‌த்தோடு ப‌டித்து ம‌கிழ்ந்தோம்.

    ReplyDelete
  4. காலையில் காளிங்க நடனம் காண‌
    கண்ணனின் குரல் கேட்டு
    கடுகி ஓடி வந்தேன் .
    என்னே அற்புதம் !!
    அழகுபெற ஓர் வசன கவிதை !!

    இதுகாறும் இப்பதிவுக்கு வரவில்லையே என
    ஏக்கம் தோன்றிய காலத்தே,
    இதனையும் எனக்குத்தெரிந்த வகையில்
    இசையுடன் கலந்தாலென்ன எனத்
    தோன்றியதும் அவன் மாயம் !!

    முதியவன் நான். முன் பற்கள் பத்தே மிச்சம். எனினும்
    பாடும் அவா போகவில்லை. அதனால்
    பாடிவிட்டேன் பல ராகங்களில். ஏன் எனக் கேட்காதீர்!
    அது என் உடல்வலியை, மனவலியைப் போக்கும் மருந்து.
    இங்கே தரன் தரும் விருந்து.

    இன்னும் சற்று நேரத்தில் யூ ட்யூபில் வரும்.
    அனுமதி இல்லையெனில் பட்டென்ச் சொல்லிவிடும்.
    சட்டென் டெலிட் செய்துவிடுவேன்.

    சுப்பு தாத்தா.
    http://pureaanmeekam.blogspot.com
    http://movieraghas.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  5. ஆஹா..சூரி ஸார், உங்கள் ரசனை அற்புதம்.
    அது சரி..உங்களுக்கும் அந்த ‘காளிங்கன் கர்வ பங்கத்திற்’கும் நடுவில் நான் யார்?

    ReplyDelete
  6. TEMPLATE ன் கீழே ‘ யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று எழுதி இருக்கிறதே, பார்க்கவில்லையா, ஸார்?

    ReplyDelete
  7. சிந்தனையைத் தூண்டும் சம்பவம். இந்த பிறவிப் பெருங்கடலில் ஒவ்வொருவருமே காளிங்கன்தானோ என்று தோன்றுகிறது. வெளியில் தெரியாத எத்தனையோ முகங்களுடன் கடலுக்குள் ஆடுகிறோம். ஆயர்பாடி கண்ணன் நம் மேல் உறையும்போதுதான் நம் ஆட்டம் அடங்குமோ.... கிருஷ்ணா... மிக மிக அருமையான கவிதை.....எளிய நடை.... . வாழ்க உங்கள் இறைத் தொண்டு..

    ReplyDelete
  8. மிக பிரமாதம்....

    அற்புதமான கவி சொல்லாடல்....

    ReplyDelete
  9. arputhamaana rasanai ...
    thodarattum ungal kalai sevai ,.,,

    vaalthukaludan
    www.therathavan.blogspot.com

    ReplyDelete
  10. திரு ஆர் ஆர், இவ்வளவு திறமை உங்களில் ஒளிந்திருக்கிறதா....அருமை அருமை என்று சொல்வதற்கு கூட தகுதி வேணும் இல்லையா. அநுபவித்தேன்.இன்னும் எழுதுங்கள்.

    ReplyDelete
  11. கோபி ராமமூர்த்திக்கு:

    மிக்க நன்றி..! ஏதோ அபிமானத்தில்
    கூறுகிறீர்கள். அந்த அளவுக்கு நான் தகுதியானவன் அல்ல !

    ReplyDelete
  12. ரிஷபனுக்கு:

    தங்கள் விமர்சனம் என் பாட்டுக்கு உரம்!

    ReplyDelete
  13. வாசனுக்கு:

    இப்படி ஒரு அன்பா? ஆண்டவா???

    ReplyDelete
  14. சூரி சாருக்கு:

    இப்படி ஒரு அன்பா, ? தங்கள் குரலில் பாடும் பரவசம் அடியேனுக்குக் கிட்டவில்லை!
    u tube link try பண்ணிப் பார்த்தேன்..கிடைக்கவில்லை, ஸார் !

    ReplyDelete
  15. Lakshminarayanan க்கு,

    தாங்கள் இது காறும் சித்திரத்தில் தான் வல்லவர் என்று நினைத்தேன்..சொற்சித்திரத்திலும் வல்லமை உண்டு என்று புரிந்து கொண்டேன்....

    ReplyDelete
  16. R Gopi க்கு:

    ”அற்புதமான கவி சொல்லாடல்....”
    என்ன ஒரு வார்த்தை ப்ரயோகம்,மிக்க நன்றி !!!

    ReplyDelete
  17. Empiric RaaGo:

    தங்கள் வருகைக்கு நன்றி! அடிக்கடி வருகை புரியவும்!

    அன்புடன்....

    ReplyDelete
  18. வல்லிசிம்ஹன்:
    இதைப் படித்தவுடன் என்னுள் கவலை...இன்னும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்பு என்னுள்!

    ReplyDelete
  19. என் வேட்டத்து ஊராகிய பிக்ஷாண்டார்கோவில் மேல அக்ரஹாரத்தில் பாலசுப்ரமணிய பாகவ்தர் என்ற் பிரபலமானவர் இருந்தார். அவரின் காளிங்க நர்த்தனத்தை இசைச் சொற்பொழிவாக திருச்சி வானொலி நிலையத்தில் ஒலி பரப்பப்பட்டு கேட்டு ரஸித்துள்ளேன். சுமார் 15 நிமிடங்கள் மூச்சை தம் கட்டி, கண்ணன் காளிங்களின் வழுக்கும் தலைகள் மீது டான்ஸ் ஆடுவதை மெய்மறந்து மிக அற்புதமாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். செவிக்கு இன்பமாக இருக்கும். நீங்கள் எழுதியுள்ளதை வாசித்ததும் அந்த ஞாபகமே வந்தது.
    தங்கள் தனித் திறமைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. ’வேட்டத்து’ என்பதை ’வேட்டாத்து’ என்று மாற்றிப்படிக்கவும்.

    ReplyDelete
  21. வை. கோ : அந்த பாலசுப்ரமணிய பாகவதரின் இசை சொற்பொழிவை வானோலியில் கேட்டிருக்கிறேன்.. நன்றி!!

    ReplyDelete
  22. கடவுள்த்தன்மை பற்றி உங்களோட இன்னிக்குப் பேசிவிட்டு அதுக்குப் பொருத்தமான தொடர்பாய் காளிங்கன் கர்வ பங்கம் படிக்க நேர்ந்தது என் பாக்கியமல்லாமல் வேறென்ன?

    தமிழின் இலக்கணமும் உயிரெழுத்தின் வரிசைக் கிரமும் என்ற கட்டுப்பாட்டுடன் இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். அசந்து போனேன்.

    உங்களின் இசையின் மடியில் தாலாட்டுப் பெறும் தமிழன்னை கொடுத்துவைத்தவள்.

    அடிக்கடி சந்திப்பேன். ஆக அடிக்கடி எழுதுங்கள் ஆர்.ஆர்.ஆர்.ஸார்.

    ReplyDelete
  23. நன்றி, சுந்தர்ஜி.. நன்றி..தங்களைப் போன்றார் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேலும்..மேலும்..எழுதத் தூண்டுகிறது...


    அன்புடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

    ReplyDelete
  24. என் அன்பிற்கினிய ஆர்.ஆர்.ஆர்! எப்படித்தவற விட்டேன் இந்தப் பதிவை? இதைப் படிக்காமல் எங்கு மேய்கிறாய் என்று என் காதைத்திருகி என்னை நீர் கண்டித்திருக்க வேண்டாமா? போகட்டும். இப்போதாவது எனக்குத் தெரிய வந்ததே!
    வார்த்தைகள் உரகமாய் நெளிந்துநெளிந்து என் சிந்தைபுக,வசமிழந்து என்னுள் ஒடுங்கி... கொஞ்சநேர தியானநிலை லபித்தது நண்பரே!

    அது
    கண்ணனின் ஆட்டமா?
    சங்கீத மூட்டமா?
    தமிழ்த் தேரோட்டமா?

    எனக்கு உடனே கருத்து சொல்லவியலா நிலை..
    கவிதை இன்னுமும் என்னுள் இறங்கிக் கொண்டிருக்கிறது...

    உமக்கு எதுக்கு என் வாழ்த்து? மாலைமாலையாய் என் அன்புமட்டுமே!

    ReplyDelete
  25. தன்யனானேன்,மோஹன்!இதைத் தாங்களும்,சிவாவும் படிக்க வேண்டும் என்கிற ஆவல்,என்னுள் திடீரென எழ...

    ReplyDelete
  26. கண்முன் அப்படியே காளிங்க நர்த்தனம் கொண்டு வந்து அரங்கேற்றி விட்டீர்கள்.
    மனதெல்லாம் நாராயணன் நாமம் .
    கண்களை மூடி கண்ணனை தரிசித்தேன். என்னை அறியாமல் கண்ணீர் பெருகியது.
    கோடானு கோடி நன்றி உமக்கு

    ReplyDelete
  27. வணக்கம்
    தரனின் (கீரத்தனாஞ்சலி)

    உங்களின் படைப்பில் அழகான சொற்பிரயோகங்களை கையண்டு அனைவரையும் உள்ளம் கவர் கள்வனாக்கி விட்டிரகள் வாழ்த்துக்ள் ....மேலும் எழுத்து துறையில் பவனி போட எனது வாழ்த்துக்கள்
    (மின்சாரம் இருக்கும் போது நம்மட வலைப்பக்கமும் வாருங்கள்.)

    -நன்றி-
    -என்றும் அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  28. http://2008rupan.wordpress.com/?like=1&_wpnonce=96007ce79d&wpl_rand=745acac12a

    ReplyDelete
  29. தரனெ'ழுதும்
    காளிங்கன் கர்வ பங்கம் கண்ணனின் நடனத்தை கண்முன் கொண்டுவந்து கணகளை நிறைத்தது... பாராட்டுக்கள்..

    ReplyDelete
  30. இப்பாேது தான் தோண்ட ஆரம்பித்தேன், அதற்குள் புதயைல் கிடைக்க ஆரம்பித்துள்ளதது. முதலில் காளிங்க நர்த்தனம். இன்னும் தோண்டிவிட்டு பிறகு வருகிறேன். பத்து ஆண்டுகளாக எனக்கு இது தெரியவில்லை. better late than never ! நன்றி.

    ReplyDelete